Sunday 25 December 2016

ஸ்ரீ காலபைரவர் திருக்கோயில் தருமபுரி sri kala bhairavar temple dharmapuri


ஸ்ரீ தட்சிண காசி காலபைரவர் கோவில்
அதியமான் கோட்டை
சேலம் பை - பாஸ் ரோடு,
தர்மபுரி - 636705,
தமிழ்நாடு, இந்தியா.

தல புராணம்

கடையேழு வள்ளல்களில் ஒருவரான தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் மரபினரால் கட்டப் பெற்ற இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ஆகும்.

இந்தியாவில் ஸ்ரீ தட்சிணகாசி கால பைரவருக்கென்று தனி திருத்தலம் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. அதில் ஒன்று கங்கை நதியில் அமைந்துள்ள காசியிலும் மற்றொன்று தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலும் அமைந்துள்ளன.

வேத மகரிஷிகள் காசி சென்று பூஜை செய்து, இவ்விடத்திற்கு கருவறை சிலையை கொண்டு வந்து தென்திசை நோக்கி ஸ்ரீ தட்சிணகாசி கால பைரவர்என்று ஸ்தாபனம் செய்தனர். பைரவர்களில் 64 வகையுண்டு, இங்கு 64 பைரவர்களும் ஒரே சொரூபமாக இருந்து உன்மத்த பைரவராய் காட்சி அளிக்கின்றன

இத்திருக்கோவிலின் உட்கூரையில் 9 நவக்கிரக கோள்கள் போல் பாவித்து அமைக்கப் பட்டுள்ளது. மேலும், மூலவரின் திருவுருவில் 12 இராசிகளும் 9 நவக்கிரக கோள்களும் அடங்கப் பெற்றுள்ளது. குறிஞ்சி முடித்து, தும்பைப் பூச்சூடி, காதில் சங்கு வளையம் தொங்க, கழுத்தில் பளிங்கு மாலையும், நாகத்தை பூணுலாகவும், வலது மேல்கரத்தில் உடுக்கையும், கீழ்கரத்தில் திரிசூலமும், இடது மேல்கரத்தில் பாசுபத அஸ்திரமும், கீழ்க்கரத்தில் கபாலமும், தலைக்கு மேல் நெருப்பு பிழம்பும் கொண்டு விளங்குகிறார். இத்திருக்கோயில் மகாமண்டப சுவற்றின் வெளிப்புறத்தில் போர்க்கள காட்சிகள் சுதை சிற்பங்களாக அமைந்துள்ளன.

எதிரிகளுக்கு பயந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்து படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் செய்வதால் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். சிவனது அம்சமாகிய இவர் காவல் தெய்வமாகையால், காவல் குறியீடாக நாயினை வாகனமாக கொண்டுள்ளார்.

இத்திருக்கோயிலில் பூஜை செய்தால், நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் மும்மூர்த்திகளின் அருளும் பரிபூரணமாக உண்டாகிறது. எடுத்த காரியத்தில் வெற்றியும் ஜெயமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. வறுமை நீங்குகிறது. சனீஸ்வர பகவானால் ஏற்படும் துன்பம் தொல்லைகள் நீங்குகின்றன. பில்லி, சூன்யங்கள் மறைகின்றன. வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது. வியாபாரத்தில் இலாபம் கிடைக்கிறது. மற்றும் கால சக்கரத்தினை இயக்குபவர் கால பைரவர்.

கார்த்திகை காலாஷ்டமி அன்று காலபைரவர் பிறந்த தினத்தன்றும், சித்திரை அஷ்டமி அன்று மிக விஷேச தினங்களாகும். மேலும் பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமி மற்றும் வார ஞாயிறு ராகு காலங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

அதியமான் கோட்டை காலபைரவர் திருக்கோயில் கல்வெட்டுக்களின் காலமும் கருத்தும்

ஊர் சிறப்பும், அமைவிடமும், ஊர்ப்பெயர் ஆய்வும்:
தமிழக வரலாற்றில் செம்மையான காலகட்டமாக இருக்கும் சங்க காலத்தில் கி.மு.400 முதல் கி.பி.200 வரையிலான காலகட்டத்தில் அதியமான் கோட்டை எனப்படும் ஊர்ப் பகுதியானது தகடூரின் ஒரு பகுதியாக இருந்தது. தகடூர் என்ற பெயர் தருமபுரி என பெயர் மாற்றம் கொண்ட பிறகு அதியமான் கோட்டை தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி வட்டத்திற்கு உட்பட்டுள்ளது

தகடூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அதியர் மரபினரின் பெயரில் அமைந்த ஊரே அதியமான்கோட்டை ஆகும். சங்க காலம் முதற்கொண்டு 13-14 ஆம் நூற்றாண்டு வரை அதியர் மரபினர் தகடூர்ப் பகுதியை தொடர்ந்தும் இடைவிட்டும் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர்தகடூர் அதிய மரபினரின் மற்றொரு தலைநகராக நாமக்கல் நகரம் இருந்துள்ளது. குறிப்பாக சங்க காலத்திற்கு பிறகு பல்லவர்களின் ஆட்சிகாலத்தின் போது சங்க கால அதிய மரபினரில் புகழ் பெற்றவர் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவார். இவர் மகன் பொகுட்டெழினி ஆவார். ஒளவைக்கு சாதல் நீங்கும் நெல்லிக்கனி அளித்து அதன் மூலம் தமிழுக்குச் செய்த கொடையை காலந்தோரும் நினைவு படுத்தப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவார். இந்த தன்னலமற்ற ஈகைப் பண்பாலே கடையேழு வள்ளல்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

நீண்ட அரச பரம்பரையைக் கொண்டது அதியர் மரபு. சங்க இலக்கியத்தில் மட்டும் 17 அதியர் மரபினரைக் காண முடிகிறது. இருந்தும் அதியர் அதியமான் என்றாலே ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் நெடுமான் அஞ்சி மட்டும் என்றும் நினைவில் நீங்காது, அதியர் மரபினர் அனைவரையும் பிரதிபலிக்கும் ஒரே முகமாய் இருக்கிறது.

தமிழகத்தில் சங்க காலகட்டத்தில் அதாவது கி.மு 3-ம் நூற்றாண்டு அளவில் பண்டைத் தமிழகம் தவிர பண்டை இந்தியாவின் பேரரசனாக விளங்கிய அசோகன், கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து பௌத்த சமயத்தைத் தழுவி மக்களுக்கும் விலங்குகளுக்கும் அறச்சாலைகள் அமைத்துத் தொண்டுபுரிய கல்வெட்டுக்கள் மூலம் சாசனங்கள் செய்தான். அச்சாசனங்களில் தன் ஆட்சி எல்லைக்கு வெளியே உள்ள பல சுதந்திர அரசுகளைப் பற்றி குறிப்பிடும் போது தமிழக அரசுகளான சேர, சோழ, பாண்டியர்களுடன் அதியர்களையும் குறிப்பிடுறார். இதிலிருந்து சங்க காலத்தில் அதியர் மரபினர் சுதந்திர ஆட்சி செய்துள்ளது தீர்க்கமாகிறது. அதியர் மரபினரில் தன்னிகரற்று விளங்கும் அதியமான் நெடுமான் அஞ்சியின் பெயரால் அமைந்ததுவே அதியமான் கோட்டையாகும். அதியமான் கோட்டை என்ற பெயரே இங்கு ஒரு கோட்டை இருந்ததற்கு சான்றாக நிற்கிறது.

தமிழக அரசர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகள் அனைத்தும் மண் கோட்டைகள் ஆகும். இக்கோட்டைகள் யாவும் பல படையெடுப்புகளாலும், இயற்கை சீற்றத்தாலும், பின்னர் வந்த மக்களின் அறியாமையாலும் அழிந்துவிட்டன. அதியமான் கோட்டையில் அமைந்த கோட்டை தரைக் கோட்டையாகும். இப்பொழுதும் அதியமான் கோட்டையில் கோட்டை மேடுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஆனால் இக்கோட்டையின் சுவடுகள் காலத்தால் பிற்பட்டவை. 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்த சென்னை வரலாறு மற்றும் தொல்லியல் துறை, இப்பகுதியானது கி.பி.1-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மக்களின் வாழிடமாக இருந்துள்ளதை உறுதி அறிக்கை செய்துள்ளது. இதிலிருந்து, சங்க காலத்திலிருதே மக்களின் கோட்டை மற்றும் வாழ்விடம் இருந்து பின்னர் அழிந்து விட்டததாகவும் மற்றொன்று அதே இடத்தில் எழுப்பப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

அதிய மரபினர் நாமக்கல்லை தலைநகராக அமைத்து ஆட்சி புரிந்த காலத்தில், தகடூர் நாட்டுக்கு உட்பட்ட இந்த பகுதிகள் கங்க மரபினர், மாவலிவாணராயர் மற்றும் நுளம்பர் மரபினரால் ஆட்சி புரியப்பட்டுள்ளது. நுளம்பர் ஆட்சியின் போது அம்மரபின் புகழ் வாய்ந்த மன்னன் மகேந்திர நுளம்பன் என்பவனின் பெயரால், அதியமான் கோட்டை என்னும் பெயரானது மகேந்திரமங்கலம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. 12, 13-ஆம் நூற்றாண்டில் அதிய்ர் மரபினர் வசம் இப்பகுதி மீண்டும் வந்துள்ளது. இராசராச அதியமான், அதியமானார் விடுகாதழகிய பெருமாள் முதலியோர் பிற்கால அதியர் மரபினரில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

இவர்கள் சோழப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசாகத் தகடூப் பகுதியை ஆட்சி புரிந்தாலும், தெற்கே நாமக்கல், கிழக்கே செங்கம், வடகிழக்கே ஆந்திர மாநிலத்திலுள்ள லட்டிகம், வடக்கே கோலார், தென்மேற்கே தலைக்காடு (அதாவது இன்றைய மாதேஸ்வரன் மலை வழியாக உள்ள ஊர், இந்த ஊர் கங்கர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் தலைநகராக இருந்துள்ளது) பகுதிகளை உள்ளடங்கிய பெரும் பரப்பினாலான  நிலப்பகுதியை பெருமளவிற்குத் தனிநிலை அதாவது சுதந்திர ஆட்சி புரிந்தவர்களாக இருந்துள்ளனர். அன்றைய நிலையில் பெருவலுவுடன் இருந்ததால் தமிழகத்தின் வடக்கு வாயிலின் கதவுக்கு தாழ்ப்பாளாக இருந்து தமிழகத்தை காத்துவந்துள்ளனர் என்று வேற்று அரசர்களால் குறிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த அரசர்களாக இருந்துள்ள அதியர் மரபினர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாக அதியமான் கோட்டை இருந்துள்ளது.

இந்த கோட்டைக்குள் சைவ, வைணவ, சமண சமயத்தை சார்ந்த சிறப்பு வாய்ந்த கோயில் பல இருந்துள்ளன. சைவத்தை சார்ந்து இரண்டு கோயில்கள் சிறப்புற்று விளங்குகின்றன. சோமேஸ்வரர் திருக்கோயில் மற்றும் காலபைரவர் திருக்கோயில் என்பன அவை. இதில் காலபைரவர் திருக்கோயில் மயீந்தீஸ்வரம் உடையார் அல்லது மயந்தீசுரம் உடையார் மற்றும் வைரநாத கோயில் என்றும் பைரவநாதன் கோயில் என்றும் அழைக்கப்பட்டிருந்தது தெரிகிறது.

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் கூறும் செய்திகள்:

கல்வெட்டு-1:
                      தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொடர் எண் : 18 ஞி 1975
                     மற்றும் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை எண் : 201 ஞி 1910
                    மூலம் அறிக்கைச் செய்யப்பட்டது.
இந்தக் கல்வெட்டு போசளர்(ஓய்சாளர்) மரபு அரசன், வீர நரசிங்கதேவன் என்பவனது ஆட்சி ஆண்டு 17 இல் அதாவது கி.பி.1235 இல் வெட்டப்பட்டது. இந்த கல்வெட்டு வைரநாதர் அதாவது இன்றைய பைரவர் திருக்கோயிலின் கருவறையின் வடபுறம், மேற்குக்புறம்  மற்றும் முன் மண்டப குமுதப் பட்டையில் என மூன்று பிரிவாக அமைந்துள்ளது.

கல்வெட்டுச் செய்தி: போசள அரசன் வீர நரசிம்மனின் தானைத் தலைவனான மாதவ தண்ணாக்கன் என்பனின் மந்திரியாக இருந்தவன் பரமேசுரகணி(பரமாயசகானி) இவன் மகேந்திரமங்கலத்தில் அதாவது அதியமான் கோட்டையில் பரமேஸ்வரமுடையார் கோயிலை அடி முதல் நுனி வரை கட்டியதையும், இறைவனின் திருவுருவை பிரதிஷ்டை செய்தததையும், சைவாச்சாரியார்களுக்கும் கோயிலுக்கும் நிலங்கள் தானமாகக் கொடுத்ததையும் தெரிவிக்கிறது.

திருக்கோயிலுக்கு வழங்கப்பெற்ற நிலம் நந்தி மங்கலத்தில் ஐரியிலிருந்து மேலத்தூம்பில் முதல் மடையில் பதினைந்து கண்டகம் விதை பெறும் நிலம் என்றும், அந்த நிலம் அவரால் அந்த மடத்துக்கு கட்டுக்கூலியாக பெற்ற நிலம் என்றும் தெரியப்படுத்துகிறது.

இவ்வரிக்கு கீழிருக்கும் கோ........... (கல்வெட்டு சிதைந்துள்ளது) நாயனார் எழுந்தருளி இருக்கின்ற நாற்புறமும் எல்லை கொண்ட தோட்ட நிலமும், இந்த தோட்டத்திற்கு கீழ் முக்கண்டக விதை கழனியும் சைவாசாரியர் பெரிய தேவன் என்பரின் மகனான விடுகாதர் என்பவனுக்கு கோயில் காணியாக நீர் வார்த்து தரப்பட்டதையும் தெரியப்படுத்துகிறது.

கல்வெட்டு -2:
                      தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொடர் எண் : 19 ஞி 1975
                      மற்றும் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை எண் :
                     மூலம் அறிக்கை செய்யப்பட்டது.

இந்த கல்வெட்டு போசாளர்(ஓய்சாளர்) மரபு அரசன். இராமநாதன் என்பவனது ஆட்சி ஆண்டு 4-இல் அதாவது கி.பி.1266-இல் வெட்டப்பட்டது. இந்த கல்வெட்டு வைரநாதர் அதாவது இன்றைய பைரவர் திருக்கோயிலின் மகா மண்டபத்தின் வடக்கு மற்றும் மேற்குப்புறக் குமுதப்பட்டையில் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி: மயந்தீசுரம் உடையார் கோயிலுக்காக இக்கோயிலின் காணியாளராகிய சிவப்பிராமணகளிடம் ஒரு திருநர்தா விளக்கு எரிப்பதற்கு அளிக்கப்பட்ட கொடையினைப் பற்றி தெரிவிக்கிறது. கொடை செய்தவர், கொடையினைப் பெற்றவர்களின் பெயர்களை அறிய முடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது.

கல்வெட்டு -3:
                         தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொடர் எண் : 20 ஞி 1975
                         மற்றும் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை எண் : 201 ஞி1910
                        மூலம் அறிக்கை செய்யப்பட்டது.

இந்தக் கல்வெட்டு போசாளர்(ஓய்சாளர்) மரபு அரசன், வீரநரசிங்க தேவர் என்பவனது ஆட்சி ஆண்டு 12-இல் அதாவது கி.பி.1237 இல் வெட்டப்பட்டது. இந்தக் கல்வெட்டு வைரநாதர் அதாவது இன்றைய பைரவர் திருக்கோயிலின் மகா மண்டபத்தின் வடக்கு, மேற்கு, தென்புற குமுதப்படையில் உள்ளது.

கல்வெட்டுச் செய்தி: வீர நரசிங்க தேவனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருத அவனுடைய தளபதியான கண்டின கோவசேகர கொப்ப கண்டன் என்பவன் மயிந்தீசுரம் உடைய நாயனாருக்கு வழங்கிய கொடையை குறிப்பிடுகிறது. இந்தக் கொடையினைப் பெற்றவர்களின் பெயர்களையும், கொடையின் விவரங்களையும் அறிய முடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது.



கல்வெட்டு-4:
                      தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொடர் எண் : 22 ஞி 1975
                      மற்றும் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை எண் : 204 ஞி 1910
                     மூலம் அறிக்கை செய்யப்பட்டது.
 
இந்த கல்வெட்டு போசளர்(ஓய்சாளர்) பரபு அரசன், சோமீஸ்வரன் என்பவனது ஆட்சி        ஆண்டு 17-ல் அதாவது 1249-இல் வெட்டப்பட்டது. இந்த கல்வெட்டு வைரநாதர் அதாவது இன்றைய பைரவர் திருக்கோயிலின் கருவறை, முன் மண்டபம், மகாமண்டபம், அதிட்டானம் பகுதிகளில் மூன்று பகுதிகளாக உள்ளது.

கல்வெட்டுச் செய்தி: சோமேஸ்வரனின் 17-வது ஆட்சி ஆண்டில் சோமீசுர தேவருக்கு கொடுக்கப்பட்ட கொடை ஒன்றைப் பற்றியதாக தோன்றுகிறது.

இன்றைய நிலையில் இக் கல்வெட்டின் மூலம் கொடையினை பெற்றவர்களின் பெயர்களையும் கொடையின் விவரத்தையும் அறிய முடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது. ஆனால் இந்திய அரசின் தொல்லியல் துறையினர் படியெடுத்து ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதன் மூலம் கீழ்க்கண்ட விவரங்களை அறிய முடிகிறது.

                 
1910 க்கு முன்னர் இந்திய அரசின் தொல்லியல் துறையினர் படியெடுத்த போது முழுமையாக ஓரே பகுதியாக இருந்த கல்வெட்டு, இக்காலத்திற்கு பிறகு செய்யப்பட்ட கோயில் திருப்பணியின் போது சிதைந்து பல இடங்களில் வைத்து கட்டப்பட்டதை கல்வெட்டின் எழுத்து முறை ஒப்புமை, அரசு ஆண்டு ஒப்புமை ஆகியவற்றை கொண்டு உணர முடிகிறது. அச்செய்தி வருமாறு:
               
                                போசள மன்னன் சோமேஸ்வரதேவனின் நன்மைக்காக சோமைய தண்ணாயக்கர் என்பர் குளத்தூர் ஏரிக்கு கீழ் வழங்கியதை குறிப்பிடுகிறது.

கல்வெட்டு -5:
              தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொடர் எண் : 27 ஞி 1975
             மற்றும் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை எண் : 204 ஞி 1910
                     மூலம் அறிக்கை செய்யப்பட்டது
                                 
     இந்தக் கல்வெட்டு போசளர் (ஒய்சாளர்) மரபு அரசன், சோமீசுவரன் என்பவனது ஆட்சி ஆண்டு 17-இல் அதாவது கி.பி.1250 இல் வெட்டப்பட்டது. இக்கல்வெட்டு பைரவர் கோயிலின் மேற்குப்புற ஜகதியில் உள்ளது.    
 கல்வெட்டுச் செய்தி: சோமேஸ்வரனின் 17-வது ஆட்சி ஆண்டில் சோமீசுர தேவருக்கு கொடுக்கப்பட்ட கொடை ஒன்றைப் பற்றியதாக தோன்றுகிறது.
இன்றைய நிலையில் இக் கல்வெட்டின் மூலம் கொடையினை பெற்றவர்களின் பெயர்களையும் கொடையின் விவரத்தையும் அறிய முடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது. ஆனால் இந்திய அரசின் தொல்லியல் துறையினர் படியெடுத்து 1910 –இல் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதைக் கொண்டு அன்றைய நிலையில் கல்வெட்டு முழுமையாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.


பைரவ தியான மந்திரம்

ரக்த ஜ்வால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூல கபால-பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் சுநவாஹனம் த்ரிநயனம்
ஆனந்த கோலாஹலம்
வந்தே பூதபிசாச நாத வடுகம் ஸ்ரீ

பொருள்:
சிவந்த ஜடையும், பரிசுத்த உடலும், சிவந்த தேஜஸும், சூலம், கபாலம், உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும், நிர்வாணமாகவும், நாயினை வாகனமாகவும் கொண்டு, முக்கண்ணாக, ஆனந்த வடிவினனாக பூத, ப்ரேத நாதனாக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.



திருநாவுக்கரசர் அருளிய காலபைரவர் துதி  
விரித்த பல்கதிர் கொள்சூலம் வெடிபடு தமருகம்
கை, தரித்தது ஓர் கோல கால பயிரவன்
ஆகிவேழம், உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்திரு
மணிவாய் விள்ளச், சிரித்து அருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரை. .

- தேவாரம்


ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய
ஸ்ரீ கால பைரவாஷ்டகம்

தேவராஜ-ஸேவ்யமான- பாவனாங்க்ரியங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர-மிந்துசேகரம்-க்ருபாகரம் ا
நாரதாதியோகிப்ருந்த-வந்தினம் திகம்பரம்
காசிகா-புராதிநாத கால பைரவம் பஜே ا ا
-1
விளக்கம்: இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர்களால் வணங்கப் பெறுபவரும்,  திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்குபவருமான காலபைரவ மூர்த்தியை வழிபடுகிறேன்.

பானுகோடி-பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட-மீப்ஸிதார்த்த-தாயகம் த்ரிலோசனம்  ا
காலகால-மம்புஜாக்ஷ-மக்ஷசூல-மக்ஷரம்
காசிகா-புராதிநாத கால பைரவம் பஜே ا ا
-2
விளக்கம்: கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் பொருளை  அளிப்பவரும் முக்கண்ணரும்,காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரை மலர் போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், காசியம்பதியில் தலைவராக விளங்குபவருமான காலபைரவ மூர்த்தியை வழிபடுகிறேன்.


சூலடங்க-பாச-தண்ட-பாணி-மாதிகாரணம்
ச்யாமகாய-மாதிதேவெ-மக்ஷரம்-நிராமயம் ا
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர-தாண்டவப்ரியம்
காசிகா-புராதிநாத காலபைரவம் பஜே ا ا
-3
விளக்கம்: சூலம்,மழு,பாசம்,தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணாரும், கரிய திருமேனி உடையவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமும் வாய்ந்தவரும், முக்திக் செல்வரும், அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்குபவருமான காலபைரவ மூர்த்தியை வழிபடுகிறேன்.


புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த-சாரு விகரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக-விக்ரஹம் ا
நிக்வணன்-மனோஜ்ஞஹேம-கிங்கிணிலஸத்கடிம்
காசிகா-புராதிநாத காலபைரவம் பஜே ا ا
-4
விளக்கம்: போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும், சித்தி பெற்றதும் அழகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாயிருப்பவரும் , எல்லா உலகத்தையும் தன் வடிவாக கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதுமாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமாகிய காசியம்பதியில் தலைவராக விளங்குபவருமான காலபைரவ மூர்த்தியை வழிபடுகிறேன்.

தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸூசர்மதாயகம் விபும் ا
ஸ்வர்ண வர்ணசேஷபாச-சோபிதாங்கமண்டலம்
காசிகா-புராதிநாத காலபைரவம் பஜே  ا ا
-5
விளக்கம்: தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மாயா மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், பொன்மயமான சடைகற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்குபவருமான காலபைரவ மூர்த்தியை வழிபடுகிறேன்.


ரத்னபாதுகா-ப்ரபாபிராமபாத-யுக்மகம்
நித்யமதவீதிய-மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் ا
ம்ருத்யுதர்ப்ப-நாசனம் கராலதம்ஷ்ட்ர-மோக்ஷணம்
காசிகா-புராதிநாத காலபைரவம் பஜே  ا ا
-6
விளக்கம்: ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும்.நித்யரும்,இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும், மறிலியின் கர்வத்தை அடக்குபவரும் கூரிய பற்களால் பயமுறச் செய்பவரும் காசியம்பதியில் தலைவராக விளங்குபவருமான காலபைரவ மூர்த்தியை வழிபடுகிறேன்.

அட்டஹாஸ-பின்னபத்மஜாண்ட-கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத-நஷ்டபாப-ஜாலமுக்ரசாஸனம் ا
அஷ்டஸித்தி-தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா-புராதிநாத காலபைரவம் பஜே  ا ا
-7
விளக்கம்: அட்டகாசமான ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளப்பவரும், கண்விழி நோக்கத்தால் பாபக்குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பவரும், அஷ்டசித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்குபவருமான காலபைரவ மூர்த்தியை வழிபடுகிறேன்.


                                     பூதஸங்க-நாயகம் விசாலகீர்திதாயகம்
காசிவாஸ-லோகபுண்ய-பாபசோதகம் விபும் ا
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா-புராதிநாத காலபைரவம் பஜே  ا ا
-8
விளக்கம்: பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், நீதி வழியில் கை தேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்தின் நாயகனும், காசியம்பதியில் தலைவராக விளங்குபவருமான காலபைரவ மூர்த்தியை வழிபடுகிறேன்.

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர-புண்ய-வர்த்தனம் ا
சோகமோ ஹதைன்யலோப-கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம்  ا ا
-9

விளக்கம்: மனதுக்கு குதூகலத்தையும், ஞானம் முக்தி சாதகத்தையும், பலவகைப்பட்ட புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்க வல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக காலபைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகிறார்கள்.





தில்லைவாழ் தீட்சிதர்கள் ஜபித்த பைரவ மந்திரம்

ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிதம்
வேதரூப ஸாரமேவ ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாஸ்ரீ தேஷு ஸ்ர்வதாஸ மஸ்தஸ்து தாயினம்
மகீந்த்ரி வம்ச புண்யரூபிணம் ஸ்மாச்ரயே

இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் செல்வம் சேரும். பணக் கஷ்டம் இருக்காது.


ஸ்ரீ பைரவ காயத்ரீ

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே !
க்ஷேத்ரபாலாய தீமஹி !
தந்நோ பைரவ : ப்ரசோதயாத் !!



மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்தநம்
உர்வாருகமிவ பந்தநாத் ப்ருத்யோர்
முக்க்ஷீய மாஅம்ருதாத்.

இம் மந்திரத்தை தினமும் ஜெபித்தால் மரண பயம் நீங்கும்.

No comments:

Post a Comment