சோழர்கால தேர்தல் முறை
சோழமன்னர்களின் ஆட்சி சிறப்புற்றிருந்தமைக்கும் நாட்டு மக்கள்
பன்னலங்களும் எய்தி அமைதியாக வாழ்ந்து வந்தமைக்கு முதற்காரணம் அக்காலத்தில் ஊர்தோறும்
நிலைபெற்றிருந்த ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டேயாகும். ஊர்சபைகள் பொறுப்புணர்சியுடன்
அறநெறி பிறழாமல் நடுவு நிலைமையுடன் கடமையை நிறைவேற்றி வந்தமையால் மக்கள் அச்சபைகள்
பால் பெருமதிப்பும் நம்பிக்கையும் வைத்து அவற்றின் முடிவுகளை ஏற்றுகொண்டு கீழ்ப்படிந்து
நடந்து வந்தனர்.
விசயாலன் காலத்தில் சோழப் பேரரசு தோன்றியபோது தஞ்சாவூர் நாகப்பட்டினம்,
திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் திருச்சிராப்பள்ளியின் கிழக்குப் பகுதிகளைக்
மட்டும் கொண்ட “சோணாடு” என்ற குறுகிய எல்லைக்குள் இருந்து பின் பல போர் வெற்றிகளின்
விளைவாக வளர்ந்தது. நாடு, கூற்றம் என்றும் அடித்தளமாக கிராமங்களும் பிரிக்கப்பட்டிருந்தன.
சோழ மண்டலம் 56 நாடுகளைக் கொண்டிருந்தது. இராசராசன் காலத்தில்
49 நாடுகள் இருந்தன. நாட்டின் எல்லை சுமார் 35 முதல் 200 சதுர மைல்கள் வரை விரிந்துள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் 20 முதல் 40 ஊர்கள் வரை இருந்தன. இரண்டு சதுர மைல்களுக்கு ஒரு ஊர்
என்றிருந்தது. ஊரின் பரப்பளவானது உழக்கு, திருவெள்ளறைக் காணம், கொற்றமங்கலத்து ஊராடுகல்
திருவண்ணாமலை என்னும் மரக்கால், பாச்சிக்கல் என்றிருந்தன. ஊரின் தலைமை பொறுப்பை ஊர்த்தலைவர் “ஊராள்வான்” எனப் பெயர் பெறுவான்.
அந்நாட்களில் கிராம சபை, தேவதானத்துச் சபை, ஊர்ச்சபை, நகர
சபை என நான்கு சபை இருந்தன. புறம் 39, அகம் 93, நற்.400 மற்றும் கடைச்சங்க புலவர்களின்
பாடல்களால் உறையூரின் கண் அறங்கூற சபையொன்றிருந்ததை அறியலாம். அம்மன்றங்களின் உறுப்பினர்கள் குடவோலை வாயிலாக அந்நாட்களில்
தேர்தெடுக்கப்பட்டனர் அகநானூற்றிலுள்ள கயிறுபிணிக் குழிசியோலை கொண்மார் என்ற 77-ஆம்
பாடற்பகுதியால் அறியலாம்.
சோழர் காலத்து வாரியங்கள்
கிராம சபைகள் நிர்வாக வசதிக்கு ஏற்ப பல வாரியங்களை அமைத்துக்
கொண்டன. அவ்வாரியங்களின் பணிகள் ஊர்களின் தன்மைக்கேற்ப அமைந்திருந்தன. சில ஊர்கள்
”சம்வதசரவாரியம் என்ற ஒன்றே கிராமத்தின் அனைத்து பணிகளையும் கவனித்தது. கல்வெட்டுகளின்
மூலமாக கீழ்க்காணும் வாரியங்கள் இருந்ததாக தெரிகின்றது. அவையாவன:
1. நீர்வாரியம்
2. ஏரி வாரியம்
3 .நில வாரியம்
4. பஞ்ச வாரியம்
5. கழனி வாரியம்
6. பொன் வாரியம்
|
7. தடிவழி வாரியம்
8. குடும்பு வாரியம்
9. களிங்கு வாரியம்
10. கணக்கு வாரியம்
11. தோட்ட வாரியம்
12. சம்வத்சர வாரியம்
|
ஐந்து வாரியங்கள் மட்டுமே உத்திரமேரூரில் அமைக்கப்பட்டது. பிற வாரியங்கள் அமைக்கப்ப்ட்டிருந்ததென வேலூர் மாவட்டத்திலுள்ள
திருப்பாற்கடலில் காணப்படும் கல்வெட்டுகளால் புலப்படுகிறது.
பல்லவர்கள் ஆட்சி
காலங்களில் கிராம சபைகள் தோன்றுவதற்கு முதற்காரணமாக அவை இருந்தன. ஆனால் பல்லவர்கள்
காலத்தில் கிராம சபைகள் நீதி வழங்குவதோடு அமையாமல் ஏரி, குளம், தோட்டங்கள் பாதுகாத்தல்,
பெருவழிகளை (நெடுஞ்சாலைகள்) அமைத்தல் அறபுறங்களை நடத்தல், அறநிலையங்கள் நடத்தல், கண்காணித்தல்,
அரசிறை வசூலித்தல் ஆகியவற்றை கடமைகளாக செய்தன.
சோழ ஆட்சிக்கு பிறகு எத்தனையோ அயலார் ஆட்சிக்குட்பட்ட பின்னும்,
ஆங்கில ஆட்சியின் போதும் கிராம சபைகள் தம் கடமைகளை நிறைவேற்றி பொதுமக்கள் வாழ்வு குலையாமல்
பணிபுரிந்து வந்தமையை வரலாற்றாராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஊரிலுள்ள ஆண்மக்கள் எல்லோரும் கிராம சபையின் உறுப்பினர்களாயிருந்தனர்.
அவர்கள் திருவடியார் எனப்பட்டனர். சபைகள் குறி, பெருங்குறி, மகாசபை என்றழைக்கப்பட்டன
உறுப்பினராவதற்கான தகுதிகள்:
1. தம் சொந்த மனையில் வீடு கட்டியிருப்பவர்களாகவும்
2. காணிக்கடன் செலுத்துவதற்குரிய கால் வேலி நிலமுடையவர்களாகவும்
3. சிறந்த கல்வியறிவு உடையவர்களாகவும்
4. அறநெறி பிழையாமல் நடப்பவர்களாகவும்,
5. தூய வழியில் பொருள் ஈட்டி வாழ்ந்து வருபவர்களாகவும்
6. காரியம் நிறைவேற்றுவதில் வன்மையுடையவர்களாகவும்
7. 35 வயதுக்கு மேல் 70 வயதுக்குட்பட்டவராகவும்
8. மூன்றாண்டிற்கு எந்த வாரியத்திற்கும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாதவராகவும்
9. பெருங் கல்விமான்களாயிருந்தால் அரைக்கால் வேலி நிலமுடையவராயிருப்பினும்
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
உரிமையிழந்தவர்கள்
1. வாரியத்தில் உறுப்பினராக இருந்து இறுதியில் கணக்கு காட்டாமல்
இருந்தவர்கள்
2. இவர்களின் நெருங்கிய உறவினர்களும், கூடத்தகாதவர்களும், கூடியவர்களும்
3. ஐம்பெரும் பாதகங்களில் முதல் நான்கை புரிந்தவர்களும்
4. இவ்விரு வகையார்களின் நெருங்கிய சுற்றத்தார்களும்
5. தீயோர்களின் கூட்டுறவினால் கெட்டுப்போனவர்களும்
6. கொண்டது விடாத கொடியோர்களும்
7. பிறர் பொருளைக் கவர்ந்தவர்களும்
8. லஞ்சம் பெற்று அதன் பின் அதற்கு பிராயச்சித்தம் செய்து தூய்மை
அடைந்தவர்களும்
9. ஊருக்கு துரோகம் செய்து பெற்று அதன் பின் அதற்கு பிராயச்சித்தம்
செய்து தூய்மை அடைந்தவர்களும்
10. கூடத்தகாதவர்களோடு சேர்ந்து அதன் பின் அதற்கு பிராயச்சித்தம்
செய்து தூய்மை அடைந்தவர்களும்
11. குற்றம் காரணமாக கழுதைமேல் ஏற்றப்பட்டவர்களும்
12. கள்ள கையெழுத்திடலாகிய கூடலேகை செய்தவர்களும் வாரிய பெருமக்களாக
தேர்ந்தெடுக்க வாழ்நாள் தகுதியிழந்தவராவர்.
உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும்
முறை
ஒவ்வொரு சதுர்வேதிமங்கலமும்,
ஊரும் நகரமும் அக்காலத்தில் குடும்பு(Ward) எனும் பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தனர்.
காஞ்சிபுரம் ஜில்லா உத்திரமேரூர் 30 குடும்புகளையும், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளிக்
கண்மையிலுள்ள செந்தலை 60 குடும்புகளையும் கொண்டிருந்தது. ஊரிலுள்ள ஒவ்வொரு குடும்பிலுள்ளவர்களும்
தாமே கூட்டம் நடத்தி நிறைவேற்றுக் கழகத்தில் உறுப்பினராக இருந்ததற்குரிய தகுதியும்
உரிமையும் உடைய எல்லோருடைய பெயர்களையும் தனித்தனி ஓலைத் துண்டுகளில் எழுதி, அவ்வோலைகளை
ஒன்று சேர்த்து, எந்த குடும்பிற்குரியவையென வாயோலை வைத்துக் கட்டி அவ்வோலையைக் கட்டை
குடத்தில் வைப்பர். இவ்வாறு எல்லா குடும்புகட்கும் செய்து வெவ்வேறு வாயோலைக் கட்டை
ஒரு குடத்திலிட்டு வைப்பர்.
பிறகு, குறிப்பிட்ட நாளில் அவ்வூரிலுள்ள இளைஞர் முதல் முதியோர்
வரை ஓரிடத்தில் கூடுவர். அரசபெருமானது ஆணைப்படி, ஒரு அதிகாரி அங்கு வந்து நடைபெறும்
நிகழ்ச்சிகளை கவனிப்பது வழக்கம். மேலும் நம்பிமார்களும் மகா சபை மண்டபத்தில் இருப்பர்.
நம்பிமார்களில் மூத்தவர், குடும்புகளின் ஓலைக்கட்டுக்கள் போடப்பட்ட குடத்தை மேல்நோக்கி
தூக்கிக் கொண்டு நடுவில் நிற்றல் வேண்டும். பிறகு ஒன்றும் உணராத இளைஞன் ஒருவனைக் கொண்டு
அக்குடத்திலிருந்து ஒவ்வொரு குடும்பிற்குரிய ஓலைக்கட்டை எடுத்து, அதில் ஒன்றை மட்டும்
எடுக்கச் செய்து மத்தியஸ்தன் கையில் கொடுக்கச் செய்ய வேண்டும். அவன் ஐந்து கையையும்
அகல விரித்து அவ்வோலைத் துண்டை உள்ளங்கையில் கொடுத்து, அதில் எழுதப்பட்டுள்ள பெயரை
சபையிலுள்ளோர் யாவரும் தெரிந்து கொள்ளுமாறு படிப்பான். அதன்பின் அங்குள்ள நம்பிமார்
யாவரும் ஒவ்வொரு பெயராக வாசிப்பார்கள். அதன் பிறகு அப்பெயர் ஓலையில் வரைந்து கொள்ளப்படும்.
அவ்வோலையில் குறிப்பிடப்பெற்றவரே கழக உறுப்பினராவார். இவ்வாறு அனைத்து உறுப்பினர்களும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வாரியங்கள் அமைக்கப்படும்.
இவ்வாரியங்களில் உறுப்பினராய் அமர்ந்துள்ளோர் எல்லோரும் ஓராண்டுவரை
எவ்வகை ஊதியமும் பெற்றுக் கொள்ளாமல் கிராம வாரியங்களை செய்ய வேண்டும். ஏதேனும் குற்றம்
புரிந்தாலோ, அபராதம் கொடுக்க நேர்ந்தாலோ வாரியத்திலிருந்து விலக்கப்படுவார். மீண்டும்
வேறொருவர் குடவோலை வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சபைக்குரிய பணிமக்கள்:
கிராம சபையார் பணித்தவற்றை செய்யும் பணிமக்கள் மத்தியஸ்தன்,
கரணத்தான், பாடி காப்பான், தண்டுவான் (தண்டல்). அடிக்கீழ்நிற்பான் ஆவர். இதில் கரணத்தான்
கணக்கு எழுதுபவன் ஆவான். பாடிக்காப்பான் என்பான், கலகம் திருட்டு முதலான குற்றங்கள்
நிகழாதவாறு ஊரைக் காப்பான். இவர்களுக்கு சம்பளம் கொடுக்க பாடிகாவல் எனும் நாடுகாவல்
வரி வசூலிக்கப்பட்டது. வரி வசூலிப்பவன் தண்டல் ஆவான். ஊர் சபையார்க்கு குற்றவேல் புரியும்
பணிமகன் அடிக்கீழ்நிற்பான் ஆவான். மத்தியஸ்தன் கிராம சபைக் கூட்டத்தில் செய்யப்படும்
முடிவுகளை குறிப்பில் எழுதுபவன்.
உறுப்பினர்களின் கடமைகள்
1. கிராம காரியங்களையும் செய்து நல்லோர் வாழவும், தீயோர் ஒடுங்கவும்
காணவேண்டும்.
2. நியாய விசாரணை செய்து முடிவு கூறுவதும், அறங்களை ஏற்று நடத்துவதும்
அறநிலையங்களைக் காண்பதும்
3. ஏரி, குளம், ஊருணி போன்ற நீர்நிலைகளை கண்காணிப்பதும்
4. நன்செய், புன்செய் நிலங்களை, தோட்டங்களை பாதுகாப்பதும்
5. ஊரில் வழங்கும் பொன்னை ஆராய்வதும்
6. நிலவரியையும் பிறவரியையும் வாங்கி அரசுக்கு செலுத்தவும்
7. கலிங்குகளில் நீரை தேக்கி முறைப்படி தண்ணீர் விடுவதும்
8. நிலங்களை கோல் கொண்டு அளந்து பரப்பையும், விளையும் பொருள்களையும்
கணக்கு கொண்டு கிராம கணக்கில் எழுதி வைக்கவும்
வாரியங்கள் செய்து வந்தன என்பது கல்வெட்டுகளால் அறியக் கிடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் பிள்ளைப்பாக்கத்திலுள்ள கல்வெட்டொன்று,
திருநின்றவூர் கிராம சபையார் முதற்பராந்தக சோழனது 19-வது ஆண்டில் கி.பி.926 இல் பாகூர்த்
திருவடி என்ற அரசியல் அதிகாரியின் முன்னிலையில் நிறைவேற்றிய முடிவுகள் சிலவற்றை காண்போம்:
1. ஒவ்வொரு வாரியத்திலும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படாத இருவர்
தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்
2. நிலவரிகள் எல்லாம் வாரியத்தின் மூலமாக செலுத்தப்பட வேண்டும்
3. நிலவரி செலுத்தப்படாத நிலங்களை கிராம சபையார் பெருவிலையில்
விற்று உரிய வரிப் பொருளை அரசாங்க பொருள் நிலையத்தில் சேர்த்தல் வேண்டும்.
4. இந்த விதிகளை பொருட்படுத்தாமல் முரண்பட்டு நடப்போர்க்கு நாள்
ஒன்றுக்கு ஒரு மஞ்சாடி பொன் தண்டம் விதித்து, அதனை உரிய காலத்தே தவறாமல் வசூலிக்க வேண்டும்.
5. மத்தியஸ்தனுக்குத் திங்கள் ஒன்றுக்கு ஒரு கழஞ்சு பொன்னும்
ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடுத்திக் கொள்ள உடைகளும் கொடுக்க வேண்டும்.
சீர்காழிக்கருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டில்
கிராம சபையின் அமைப்பு பற்றி மூன்றாம் குலோத்துங்க சோழன் கி.பி.1185-ஆம் ஆண்டில் அனுப்பிய
உத்தரவு ஒன்றைக் கூறுகிறது. அதில்
1. இவ்வாண்டு முதல்
சபை வாரியத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 10 ஆண்டுகள்
அதில் உறுப்பினர்களாக இருத்தல் கூடாது.
2. சிறந்த கல்வியறிவு உடையவர்களாகவும், நடுவுநிலைமை உடையவர்களாகவும்
40 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
3. கடந்த ஐந்தாண்டுகள் சபையின் உறுப்பினராக இருந்தவர்களின் உறவினர்கள்
உறுப்பினராக தேர்ந்தெடுக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.
4. உறுப்பினராகத தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்மக்களிடம் வரி வாங்குதலில்
முறை தவறி நடப்பின் தண்டிக்கப் பெறுவர் போன்ற விதிகள் இடம் பெற்றுள்ளன.
தஞ்சாவூர் நன்னிலம் அய்யம்பேட்டையிலுள்ள கல்வெட்டில் கி.பி
1190 லும், நாகப்பட்டினம் செம்பியம் மாதேவிக் கல்வெட்டில் கி.பி1233 லும் கிராம சபை
உறுப்பினர்களின் தகுதி பற்றி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் கும்பகோணம் தாலுகா சேய்ஞலூரில் காணப்படும் கல்வெட்டில்
3-ஆம் ராஜராஜசோழன் கி.பி.1245-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மூலபருஷையார் அமைத்த விதிகளைக்
காணலாம்:
1. ஓராண்டில் ஊர் வாரியத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்பெற்றுத்
தம் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மறுபடியும் பழைய விதியின்படி ஐந்தாம் ஆண்டில்தான் வாரிய
உறுப்பினராகத தேர்ந்தெடுக்கபடுதல் வேண்டும். அவர்களுடைய புதல்வர்கள் நான்காம் ஆண்டிலும்
உடன்பிறந்தார் ஐந்தாம் ஆண்டிலும் அதில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படலாம்.
2. 40 வயதுக்கு குறையாதவர்களே வாரியப் பெருமக்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. குறிப்பிட்ட நாளில் ஊர்ச்சபையார் அனைவரும் திரண்டு, முன்னோர்கள்
மேற்கொண்ட முறைகளை பின்பற்றி நடப்போம் என்று உறுதி கூறியவர்களையே தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
4. தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்கள் விதிப்படி ஓராண்டு முடிய
அலுவல் பார்க்க வேண்டும். ஒராண்டிற்கு மேல் உறுப்பினராயிருக்க முயலுவோர் கிராம துரோகிகளாக
குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவர்.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட வாரியப் பெருமக்கள் ஊரில் கடமை, குடிமை,
சபா விநியோகம் ஆகிய வரிகளை பெற்று வசூலிக்க வேண்டும். கொடுக்க வேண்டிய வரித்தொகைக்கு
மேல் அதிகமாக எதனையும் வாங்க கூடாது.
6. சபா விநியோகம் என்ற வரியை குடிமக்கள் கொடுக்க வேண்டிய பிற
வரிகளோடு சேர்த்து வாங்காமல், தனியாக வசூலித்து ஊர்க்கணக்கனுக்கு எழுத்து மூலமாக உத்தரவு
அனுப்பி செலவிட வேண்டும்.
7. ஒரு காரியத்துக்காக 2000 காசுகளுக்கு மேல் செலவு செய்ய வேண்டி
வந்தால் மகா சபையாரின் அனுமதி பெற்ற பின்னரே செலவிட வேண்டும்.
8. இவ்விதிகளின் படி செலவளிக்காமல், முரண்பாடாக செலவளித்தாலோ,
வாங்க வேண்டிய வரிக்கு அதிகம் வசூலித்தாலோ , வாரிய பெருமக்கள் அத்தொகைக்கு ஐந்து மடக்கு
தண்டம் கொடுத்தல் வேண்டும்.
9. குடிமக்கள் கொடுக்க வேண்டிய தொகைக்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட
போது, இரண்டு மடங்காக தண்டம் வசூலிக்க வேண்டும்.
10. மேலே குறிப்பிட்ட தொகைகள் எல்லாவற்றையும் சேர்த்து சபாவிநியோகத்தோடு
சேர்ந்த்து செலவிட வேண்டும்.
11. ஊர்க்கணக்கனும், வாரியப் பெருமக்களும் குடும்பின் பிரதிநிதிகளும்
மகாசபையாரின் உத்தவின் படி ஆண்டு தோறும் மாற்றப்பட வேண்டும்.
ஆதி ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் தஞ்சை மாவட்டம் மன்னார்குடி வட்டத்திலுள்ள சித்தமல்லி
கிராமச்சபை கூடி ஓர் அமைப்புச் சட்டம் நிறைவேற்றியது. இத்தீர்மானப்படி ஊர்க் கூட்டங்களிலும்
நாட்டு வாரியங்களிலும் சாசன பத்தர் என்பவர்கள் மட்டும் தான் அங்கத்தினர்களாக இருக்க
முடியும். வேறு யாரேனும் இருக்க விரும்பினால் அரசரின் திருவாணைப்படி தேர்ந்தெடுக்கபட
வேண்டும்.
மூன்றாம் ராஜேந்திரனின் 17-ஆம் ஆண்டில் உறுப்பினர்கள் சமநோக்கு
உடையவராகவும், ஏற்கனவே 5 ஆண்டுகள் அங்கத்தினர்களாக இருந்தவர்களும் அவருடைய உறவினர்களும்
தேர்தலில் நிற்கக் கூடாதென முடிவெடுக்கப்பட்டது.
யாரேனும் அதிகாரிகள் உதவியினால் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டால்
அல்லது குறிப்பிட்ட காலவரம்பை மீறி பதவியிலிருந்தால் அவர்கள் கிராம துரோகிகளாக கருதப்பட்டு
சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பியன் மாதவி “சாசன பத்த சதுர்வேதி பட்டதானம் பெரு மக்கள்
“ என்ற குழுவை தோற்றுவித்ததாக உத்தம சோழன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
மூன்றாம் குலோத்துங்கனின் ஏழாவது ஆண்டில் 73-வது நாள் குலோத்துங்க
சோழன் தனி நாயக சதுர்வேதி மங்கலத்திற்கும் தண்டுவனருக்கும் அரசர் அனுப்பிய விதிமுறை
பற்றிய ஆணையை தஞ்சை தலைஞாயிறு கல்வெட்டு தெரிவிக்கிறது. பிரமேந்திரர், வாணாதிராஜா என
இரு அதிகாரிகள் கோரிக்கைக்கு இணங்க அரசர் உத்தரவு பிறப்பித்தார்.
இது போன்று உத்தரமேரூர், திருநின்றவூர், தலைஞாயிறு, அய்யம்பேட்டை,
இராப்பட்டீச்சுரம், காமரசவல்லி, செம்பியன் மாதேவி, சேய்ஞலூர் ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள்
மூலம் அறியும் கிராம சபை தேர்தல் மற்றும் விதிகளாகும்.
பாண்டியர் காலம்
பாண்டியர் ஆட்சியில் ஊரவர், சபா, நகரத்தார், நாட்டார் போன்ற
உள்ளாட்சி மன்றங்கள் இருந்தன. பல்லவர் பாண்டியர் காலந் தொடங்கி (கி.பி.600) விசய நகரத்தாரின்
உச்ச கட்ட ஆட்சிவரை(கி.பி.1565) சோழர் ஆட்சியில் ஊரோம் என்றழைக்கப்பட்டது பாண்டிய நாட்டில்
ஊர் என்ரழைக்கப்பட்டது. விசயநகரத்தாரின் சீரெங்காவின்
கி.பி.1575 ஆம் ஆண்டு நாகலாபுரம் கல்வெட்டு (620/1904) அம்மன்றத்தை ஊரார் என்றழைக்கிறது.
பாண்டியர் ஆட்சியாளராக தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் இம்மன்றத்தின் உறுப்பினர்
யார்? எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. நம் தமிழக தொல்லியல்
துறை முயற்சி செய்தால் நிச்சயம் வாய்ப்புண்டு.
C.P.சரவணன், வழக்கறிஞர்
ஆதார நூல்கள்
1. ”தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெரு வேந்தர் காலம்”, நான்காம்
தொகுதி(முதல் பகுதி)
தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ் வளர்ச்சிக் இயக்ககம், சென்னை
2. ”பிற்காலச் சோழர் வரலாறு” தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
3. ”இராசேந்திரன் செய்திக் கோவை’ தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
4. ”சோழர்கள்” புத்தகம் 2 பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
5. ”சோழர் சமுதாயம்” தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
6. தமிழ்நாட்டு வரலாறு பாண்டிய பெருவேந்தர் காலம், சென்னை
No comments:
Post a Comment