Friday 23 December 2016

தேர்தல் வரலாறு-4 பிரிட்டிஷ் காலத்தில் தேர்தல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள்

பிரிட்டிஷ் காலத்தில் தேர்தல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள்

பிரிட்டிஷ் காலத்தில் தேர்தலில் மாறுதல்களும் சட்டமன்றங்களில் இந்தியர்கள் இடம்பெறச் செய்ததும் தற்செயலாக நடந்தவைகளல்ல. அதில் பல புரட்சிகள் தியாகங்கள் உள்ளன. அதில் தமிழகத்தின் பங்கு மிக அதிகம் ஆகும். அதில் முக்கிய அம்சங்களை மட்டும் பார்ப்போம்.

பிரிட்டிஷ் ஆட்சி

East India House, Leadenhall Street, London

கிழக்கு இந்திய கம்பெனிக்கு 31, டிசம்பர், 1600 இந்திய பட்டயச் சட்டம்(The Charter Act of India,1600)  இயற்றப்பட்டு அதன் மூலம் இந்தியாவில் வியாபாரம் செய்ய அதிகாரம் பெற்றது. சிறிது சிறிதாக அரசியல் அதிகாரம் பெற்று 5, அக்டோபர் 1676-இல் இந்திய பட்டயச் சட்டம் மூலம் ரூபாய், பைசா என நாணயங்கள் அச்சிட அதிகாரம் பெற்றது. 9, ஆகஸ்ட் 1683 அன்று இந்திய பட்டயச் சட்டம் மூலம் போரை அறிவிக்கவும் வழிநடத்திடவும் அதிகாரம் வழங்கப்பட்டது. 24, செப்டம்பர் 1726- இந்திய பட்டயச் சட்டம் மூலம் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 11, டிசம்பர், 1687 சென்னையில் மாகாணங்கள் அமைக்கவும், 24, செப்டம்பர், 1726 இல் மேயர் பதிவி நிர்ணயம் அதிகாரம் வழங்கப்பட்டது. 1757-இல் பிளாசிப் போரின் வெற்றிக்குப் பிறகு மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டன.

நெற்கட்டாஞ் செவல் பூலித்தேவர் (-1767), கம்மந்தான் கான் சாகிபு (-15.10.1764) 2,பிப்ரவரி, 1790-இல் பாளையக்காரனான வீரபாண்டியன், சிவகங்கை மருது சகோதரகள்(-24.101801) புரட்சி வழியில் பல பிரிட்டிசாருக்கு எதிராக கிளர்சிகளும் புரட்சிகளும் செய்தனர்.


ஒழுங்குமுறைச் சட்டம் 1773 (Regulating Act,1773)

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நார்த் பிரபுவால் 18, மே, 1773 அன்று ஒழுங்குமுறைச் சட்டம் 1773 அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையை போலவே பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்கள் நடைமுறையில் இருந்தன. இந்த  மாகாணங்களுக்கு பொறுப்பாக தனித்தனி ஆளுநர்கள் செயல்பட்டு வந்தனர். 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும்  சட்டத்தின் கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்நியமிக்கப்பட்டார்அதன்படி கம்பெனியின் இயக்குனர்கள் 4 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தெடுக்கப்படும் இயக்குனரிடம் £500 முதல்  £ 1000 வரை முதலீடு இருப்பு இருக்க வேண்டும். £3000 இருப்பு இருப்பவர்களுக்கு இரண்டு வாக்குகளும், £ 10000 இருப்பு வைத்திருப்பவர்கள் 4 வாக்குகளும் பெற்றனர்.

இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி

1799ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடந்த நான்காம் போரில் திப்புசுல்தான் மரணமடைந்தார். இந்த வெற்றிக்கு பின் ஆங்கிலேயர் ஆற்காடு நவாபுகளின் உரிமையில் தலையிட்டு நவாப் என்னும் அதிகாரத்தை பறித்து ஆற்காடு இளவரசன் என்ற பட்டத்தை கொண்டு வந்து முழு ஆதிக்க அதிகாரத்தை பெற்றனர். திப்புசுல்தான் மகன்கள் 13 பேரும், மகள்கள் 6 பேரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இதனால் வேலூர் கோட்டையில் இருந்த இந்திய வீரர்களுக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தை ஒழித்து கட்டும் உணர்ச்சி உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது.


இந்நிலையில் 1806ல் மதராஸ் படைக்கு முதன்மை தளபதியாக நியமிக்கப்பட்ட சர் ஜான் கிரடேக் என்பவர் பல விதிமுறைகளை புகுத்தினார். இந்திய படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக்கூடாது விபூதி, நாமம் போன்ற ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவு இந்து, முஸ்லிம் சமயத்தை சேர்ந்த 1500 வீரர்களுக்கு கோபத்தை மூட்டியது. அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றனர். கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்திய சிப்பாய்களுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்க செய்தது. அப்போது வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தான் மகன்கள் தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம்சாட்டி கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்திய சிப்பாய்கள் 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி புரட்சியில் ஈடுபட்டு அதிகாலை 3.00 மணிக்கு லெப்டினென்ட் ஈவிங், கேப்டன் மக்லாசலன், தளபதிகள் மிட்சல், பேபி, ஜேனார், சார்ஜண்ட் பிராடி, லெப்டினண்ட் கட்க்ளிப் ஆகியோர் கிளர்ச்சி சம்பந்தமாகஆலோசனையில் இருந்தனர். இதை அறிந்த இந்திய சிப்பாய்கள் அவர்களை தாக்கினர். 372 பேர் கொண்ட பிரிட்டிஷ் படையினரில் 191 பேரை கொன்று குவித்தனர். இந்த தகவல் மேஜர் கோட்ஸ் உடனடியாக ஆற்காட்டில் இருந்த கர்னல் கில்ஸ்பீக்கு தகவல் தெரிவித்தான். அங்கிருந்து ஆங்கிலேய படைகள் புறப்பட்டு வந்து இந்த புரட்சியை அடக்கினர். புரட்சியை ஒடுக்கிய கில்ஸ்பீக்கு 24500 பொற்காசுகள் வழங்கப்பட்டன மற்றவர்களுக்கு பதவி உயர்வு. கிளர்ச்சியில் ஈடுபட்ட நம் இந்திய வீரர்கள் மீது விசாரணை நடத்திய கர்னல் ஹார்கோர்ட் அதில் 6 பேரை பீரங்கியால் பிளக்கச் செய்தான். 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், 8 பேர் தூக்கிலிடப்பட்டனர்., 2 பேர் நாடு கடத்தப்பட்டனர், இவை யாவும் வேலூர் மேனுவலில் (Vellore District Manual) இடம்பெற்றுள்ளது.


ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட இந்தியாவில் முதன் முதலாக மீரட்நகரில் 1857 மே 10ந்தேதி கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் செய்த கிளர்ச்சியை வரலாற்று ஆசிரியர்கள் சிப்பாய் புரட்சி என்று வர்ணிக்கின்றனர். உண்மையில் அதற்கு 51 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்தது தான் முதல் புரட்சி. இதை வேலூர் சிப்பாய் கலகம் என வரலாறு பதிவு செய்துள்ளது.

இதுவே முதல் இந்திய சுதந்திர போராட்டமாகும். இந்திய அரசும் இதை மனதில் வைத்து நினைவு தபால் தலை வெளியிட்டுள்ளது



சிப்பாய்க் கிளர்ச்சி, 1857  (Indian Rebellion of 1857)

1764 ஆம் ஆண்டு பக்சார் போருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின் வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. தொழில் புரட்சியின் விளைவாக பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. காவல் துறை கீழ் நீதிமன்றங்கள், சிறு அதிகாரிகளிடம் ஊழல் மலிந்து காணப்பட்டதுஆங்கிலேயே வணிகர்கள் இவற்றை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதே நேரம் இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்கள் நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன. படைப்பிரிவிலும்  உயர்ஜாதி பிராமணர்கள், ரஜபுத்திரர்கள் மற்றும் பிற ஜாதியினரிடையே பாகுபாடுகள் அதிகமாயின. இவ்வாறு புரட்சிக்கான காரணங்களை எழுதிய ஆங்கிலேய அதிகாரி வில்லியம் எட்வர்டு 1859-இல் பதிவு செய்கிறார்.

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது சிப்பாய்க் கலகம் என்பது சிப்பாய்கள்  10, மே மாதம்,1857- இல் இந்தியாவில் மீரட்என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பிரிட்டிஷ் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர். ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சிஇந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது

இங்கிலாந்து அரசியின் நேரடி ஆட்சி

1759-ஆம் ஆண்டே கிளைவ் பிட்டுக்கு(Pitt) எழுதிய கடிதத்தில் அரசியை இந்தியாவில் ஆட்சியை ஏற்றுக் கொள்ள கடிதம் எழுதினார். ஆயினும், ஆனால் 1857-ஆம் ஆண்டு புரட்சியின் விளைவாக பிரிட்டிஷ் நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்பையும், மறுசீரமைப்பு தவிர்க்க முடியாததென்ற நிலையும் ஏற்பட்டது. இந்திய அரசுச் சட்டம்,1858 ஆட்சியதிகாரம் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து 1, நவம்பர், 1858 அன்று இங்கிலாந்து மகாராணியிடம் மாற்ற வழிவகை செய்தது. கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி அரசு செயலர் (Secretary of State) நியமிக்கப்பட்டார். இச்சட்டம் கவர்னர் ஜெனரல் ஒரு நிர்வாகக் குழுவை வைத்துக் கொள்ள வழிவகை செய்தது. அவருக்கு உதவிட 15 உறுப்பினர்கள்குழு நியமிக்கப்பட்டது. அதில் 7 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கர்சன் பிரபு


இந்திய கவுன்சில் சட்டம்,1861 கவர்னர் ஜெனரலுக்கு 5-வது உறுப்பினரை சேர்த்தது. கானிங் பிரவு காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம்,1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1861 மற்றும் உயர்நீதிமன்றங்கள் சட்டம்,1858 போன்றவை இயற்றப்பட்டன.
கானிங் பிரவு (1856-1862) எல்ஜின் -1 (1862-1863) சர் ஜான் லாரன்ஸ் (1864-1869) மேயோ(1869-1872) நார்த் புரூக்(1872-1876) பிட்டன்(1876-1880) ரிப்பன்(1880-1884) பஃரின் (1884-1888) லான்ஸ்டெளன் (1888-1894) எல்ஜின் -2 (1894-1899) அகர்சன்(1899-1905) போன்றோர் கவர்னர் ஜெனரலாக பணியாற்றினாலும் கானிங் மற்றும் கர்சன் காலங்கள் நிர்வாகம், பாராளுமன்ற சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட காலங்களாகும்.

கானிங் பிரபு


.
பிரிட்டிஷார் நிர்வாக வசதிக்காக இந்தியாவை வங்காளம், சென்னை பம்பாய் ஆகிய மூன்று மாகாணங்களாக பிரித்தனர். அப்போதிருந்த நிதி நெருக்கடியினால், நகராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் நிர்வாகத்தை பரவலாக்குவதற்கு இட்டுச் சென்றது. அதன் படி 1864 க்கும் 1868 க்கும் இடையில் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. உறுப்ப்பினர்கள் மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் தலைமையில் இயங்கினர். கிராமபுற மற்றும் நகர் புற உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்கள் அரசு சாராதவர்களாக இருக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தது. வாக்குரிமை கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் குறைவான வாக்குகளிலேயே உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசு சாராதோர் தலைவர் பதவிக்கு படிபடியாக வந்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் உரிமையை அரசு தன்வசம் வைத்துக் கொண்டது. அரசு வைத்திருந்ததால் அவ்வமைப்புகள் அரசு துறைபோலவே செயல்பட்டு வந்தன.

மார்லீ- மின்டோ சீர்திருத்தங்கள்

John Morly

இந்திய பட்டயச் சட்டம்,1833-இன் படி 1909-ஆம் ஆண்டு வரை இந்தியா இந்தியரல்லாதவர்களால் ஆளப்பட்டு வந்தது. இந்திய அரசின் செயலர் ஜான் மார்லியும் , அப்போதைய வைசிராய் மிண்டோவும் இணந்து இந்திய கவுன்சில் சட்டம்,1909 அறிமுகம் செய்தனர். இதுவே மார்லீ- மின்டோ சீர்திருத்தங்களென அழைக்கப்பட்டன. அதன் கீழ் முதல் முறையாக சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்த்தப்பட்டது. அதில் 27 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். ஆயினும் சட்டமன்றத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. தேர்தலுக்கான கொள்கைகள் வரையறுக்கப்பட்டன. தேர்தல் மறைமுகமாக நடத்தப்பட்டது. மத்திய சபை உறுப்பினர்களை மாகாண உறுப்பினர்களும், முனிசிபல் உறுப்பினர்களும், மாவட்ட வாரியங்கள், வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நில உரிமையாளர்கள் தேர்ந்தெடுத்தனர். பகுதி வாரியான பிரதிநிதித்துவம் இந்தியாவுக்கு ஒத்துவராது, ஜாதிவாரியான பிரதிநிதித்துவம் பரிந்துரைக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு விவாதிக்கவும், துணைக் கேள்விகள் கேட்கவும் வழிவகை செய்தது. ஆனாலும் வெளிநாட்டுறவுகளைப் பேசவோ, அரசியின் உறவுகளைப் பேசவோ அனுமதி மறுத்தது. இவ்வாறு தேர்தல், அரசியலமைப்பு ரீதியாக வளர்ச்சி என்றபோதிலும், பிரிவினைக்கு வழிவகுத்தது இத்திட்டத்தின் குறைபாடாகும். மிண்டோவுக்கு பின் வந்த ஹார்டிஞ்ச் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றினார்.

ஹோம்ரூல் இயக்கம்

1875-ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டை சார்ந்த H.P.பிலோவட்ஸ்கியும்( H.P.Blavatsky) அமெரிக்க கொலோனல் H.S.ஆல்காட்(H.S.Olcott)இருவரும் சேர்ந்து இந்து சமயத்திற்கு நியூயார்க்கில் புத்துணர்வூட்டும் வகையில் தியோசொபிகல் சொசைட்டியை உருவாக்கினார்கள். அதன்பின் 1879 ஆம் ஆண்டு பிலோவட்ஸ்கியும், ஆல்காட்டும் அப்போதைய சென்னையின் புற நகர் பகுதியான அடையாரில் 1882-ஆம் ஆண்டு தியோசொபிகல் சொசைட்டியின் தலைமையகத்தை நிறுவினர்.
        H.P.Blavatsky
       H.S.Olcott
     Annie Besant

ஐயர்லாந்து நாட்டில் 10, அக்டோபர் பிறந்த அன்னிபெசன்ட் இந்தியாவை மிகவும் நேசித்தார். 1893-இல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மநாட்டில் கலந்து கொஅபின் தியோசொபிகல் சொசைட்டிக்கு தன்னை அற்பணித்தார். அதன்பின் 16, நவம்பர் 1893 இல் தூத்துக்குடியில் வந்திறங்கினார். தன்னுடைய England, India Afghanistan புத்தகத்தில் எவ்வித பயமுமின்றி இம்பீரியல் கொள்கைகளை எதிர்த்தார். 1907 ஆல்காட்டின் மறைவுக்கு பின் தியோசொபிகல் சொசைடியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1913-இல் தீவிர ஹோல் ரூலுக்கு அடிகோலினார். அதன் முதல் கூட்டம் 3, செப்டம்பர் 1916 க்குபின் நடைபெற்றது. ஒருபுறம் லோகமான்ய திலகரும் மறுபுறம் பெசன்டை தலைவராகவும் G.S.அருந்துலேவை அமைப்பு செயலாளராகவும்  C.P.ராமசாமியை பொருளாளராக கொண்டியங்கியது. அப்பொழுது தான் “சுதந்திரம்” எனது பிறப்புரிமை என்று திலகர் முழங்கினார். 1917 ஜூன் மாதம் அன்னிபென்ட் அம்மையார் கைது செய்யப்பட்டு மக்கள் கிளர்ச்சியின் விளைவாக விடுதலை செய்யப்பட்டார். இக்கிளர்ச்சியின் விளைவாக  20, ஆகஸ்டு, இந்தியா குறித்த தனது கொள்கையை பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. அதற்கென 1918-ஆம் ஆண்டு மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.


ஆதார நூல்கள்
1.   The Gazetteer of India Vol 2, Dr.Chopra, Ministry of Information & Broad casting
2.   ”இந்திய விடுதலையை முன்னெடுத்தப் புரட்சிகள்” பேராசிரியர் ந.சஞ்சீவி
3.   “March to Freedom in Madras Presidency 1916-1947” Saroja Sundararajan
4.   ”நவீன கால இந்தியா” பிபன் சந்திரா
5.   “A constitutional History of India’ Arthur Berriedale Keith
6.     “Landmarks in Indian Legal and Constitutional History”  B.M.Gandhi

7.     “History of freedom Struggle” Dr.G.Venkatesan

No comments:

Post a Comment