Friday, 23 December 2016

தேர்தல் வரலாறு-2 வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டன.

வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டன.

தற்போதைய தேர்தலுக்கெல்லாம் முன்னோடி நம் தமிழகம். ஒரு மாநிலத்திற்கு நாடு  பெயரிட்ட அறிஞர் அண்ண வாழ்ந்த காஞ்சிபுரம் தாங்கி நிற்கும் ஆதாரங்களை சற்று பார்ப்போம்.

உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுக்கள் :
காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் ஊர் பெருமக்கள் சபை இயங்கி வந்துள்ளது. இச்சபை உழவு, கல்வி, மராமத்துவேலை, கோயில் பணி, வாணிபம் முதலானவற்றை நிர்வகித்து வந்தது. சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது. குடவோலை முறையில் அங்கத்தினர் தேர்வு செய்யப்பட்டது போன்ற சிறப்புமிக்க ஊராட்சிமுறையைப் பற்றி 2 கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் ஒன்று முதலாம் பராந்தகனின் 12 ஆம் ஆட்சியையும் (கி.பி. 917) மற்றொன்று 14-ஆம் ஆட்சியாண்டையும் சேர்ந்தது (கி.பி.919). உத்திரமேரூர் இரண்டாம் நந்திவர்மனது காலத்திலேயே முதன்முதலாக உத்திரமேரூர் (கி.பி.750) சதுர்வேதிமங்கலமாக உருவாக்கப்பட்டது.
குறிப்பு :
குடவோலை முறைப் பற்றிப் பேசும் முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டது. இரண்டாம் கல்வெட்டில் 18 வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடத்திலிருந்து முதல் 5 வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுப் பாடம் :
1. ஸ்வஸ்திஸ்ரீ (;) மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது (;) உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபையோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞை

2.
யினால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த

3.
பரிசாவது ;) குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம்

4.
எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டி

5.
ருப்பாரை அர்த்தசௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு
கல்வெட்டுச் செய்தி :
மதுரையைப் கைப்பற்றிய பரகேசரிவர்மனான முதலாம் பராந்தகனின் 12ஆம் ஆட்சியாண்டிலும் (கி.பி917), 14ஆம் ஆட்சியாண்டிலும் (கி.பி. 919) உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது. அவ்வமைப்பின்படி அரசு அதிகாரி ஒருவரும் உடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம் தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரியம் போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு அதன் செயல்பாட்டிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் என்ன அவர்களது பதவிக்காலம் போன்றவை இக்கல்வெட்டில் விளக்கப்பெற்றுள்ளன. உத்திரமேரூர் சபையில் 30 குடும்புகளும், 12 சேரிகளும் உள்ளன. எனவே அவை அனைத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் முறையில் தேர்தலானது நடத்தப்படவேண்டும். அவ்விதம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வுக்குப் பின் நடைபெறவேண்டிய நடைமுறைகள் ஆகியவை கல்வெட்டுக்களில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில விதிமுறைகளின்படி ஊராட்சித் தேர்வு நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர் மீண்டும் 14-ஆம் ஆண்டு மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இடைப்பட்ட ஆண்டில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கும் போல் தோணுகிறது. மேலும், உத்திரமேரூர் ஊராட்சித் தேர்தலை நாகசாமி போன்ற வரலாற்றாய்வாளர்கள், இது மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்று விளக்குகின்றனர்.
.

மேலும் இக்கல்வெட்டில் உறுப்பினர்களின் தகுதிகள் குறிப்பிடப்படும் பொழுது, சாஸ்திரத்தில் வல்லுனர்கள் மட்டுமே இதில் உறுப்பினராகத் தகுதி படைத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும், இது போன்ற தேர்தல் முறை (குடவோலை முறையிலான ஊராட்சித்தேர்தல்) வேறேங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. பாண்டிய மன்னன் மாறன் சடையனின் காலத்தைச்சேர்ந்த மானூர் (திருநெல்வேலி மாவட்டம்)கல்வெட்டும் பிரம்மதேய ஊர்களுக்கான சபைத் தேர்வுமுறை பற்றிப் பேசுகிறது. நடனகாசிநாதன், ஒட்டு மொத்தமாக கல்வெட்டுச்செய்திகள் பற்றிக் கூறுகையில் தமிழ்நாடு முழுவதுமே குடவோலை முறையிலான ஊராட்சித்தேர்தலே நடைபெற்றதாகக் கூறுகின்றார். எனவே இதை மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்பதற்குப் பதிலாக ஊர்களின் சபைத்தேர்தல் என உரைப்பது சாலச்சிறந்ததாகும். இனி கல்வெட்டுச் செய்திகளைக் காண்போம். இதில் வாரியங்கள் ஸம்வத்ஸர வாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரவாரியம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பணி என்ன? என்பது நேரடியாக்க் கொடுக்கப்படவில்லை. அதன் பெயர் கொண்டு ஆய்வாளர்கள் ஸம்வத்ஸர வாரியம் என்பது - ஆண்டுக்கு ஒரு முறை கூடும் மேற்பார்வைக்குழு என்றும், தோட்டவாரியம் - தோட்டப்பணிகளைக் கண்காணிப்பது என்றும், ஏரிவாரியம் - நீர் நிலைகளை நிர்வகிப்பது என்றும், பொன் வாரியம் - பொன்னின் மாற்றை காண்பதற்கும், பஞ்சவார வாரியம் - நில வரி வாரியம் (1/5 ஐந்தில் ஒரு பங்கு நிலவருவாய் பெறும் குழு ) என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
சபை உறுப்பினராக்க் கோரப்படும் தகுதிகள்(முதல் கல்வெட்டு) :
1. 1/4 வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்

2.
சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்

3.
வயது 30மேல் 60க்குள் இருக்கவேண்டும் 

4.
சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்
5.
நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.

6.
கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களதுநெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
சபை உறுப்பினராக்க் கோரப்படும் தகுதிகள்(இரண்டாம் கல்வெட்டு) :
1. கால் வேலிக்கு அதிகமான இறை செலுத்தக் கூடிய சொந்த நிலம் பெற்றிருக்க வேண்டும்.

2.
அந்நிலத்தில் சொந்த மனை இருக்கவேண்டும்.

3.
வயது வரம்பு முந்தைய கல்வெட்டில் 30க்கு மேல் 60க்குள் என்றிருந்தது. பின் அது மாற்றப்பட்டு 35க்கு மேல் 70க்குள் என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4.
மந்தர பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுபவன்.

5. 1/8
நிலமே பெற்றிருப்பினும் 1 வேதத்திலும் 4 பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.

6.
நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.

7.
கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.

8.
ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முன் கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை); தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரிமக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் . இது போன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.

9.
ஆகமங்களுக்கு எதிராக (அகமிஆகமான) பஞ்சமா பாதஹங்கள் செய்தார், கொள்கையை மீறுபவன் (ஸம்ஸவர்க்கப்பதிதரை), பாவம் செய்தவர்கள், கையூட்டு பெற்றவர்கள் அதற்கான பரிஹாரகளைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும் அவர்களை உறுப்பினராகும் தகுதியற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக இயலாது. கொலைக் குற்றஞ்செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக்குற்றம் செய்பவர் (சஹசியர்), அடுத்தவர் பொருளை அபஹரிப்பவர், ஊர் மக்களுக்கு விரோதியாய் இருப்போர் (கிராம கண்டகர்) இவர்கள் உறுப்பினராகத் தகுதியற்றவர்களாவர்.

10.
கழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராகத் தகுதியற்றோராவர். இதன் மூலம் உறுப்பினர்களுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
தேர்தல் முறை:
இவ்விதம் தகுதிஉடைய உறுப்பினர்களின் பெயர்களைத் தனித்தனியே ஒவ்வொரு குடும்பும் ஒலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு அதன் வாயைக்கட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

 தேர்தல் நாள் அன்று மஹாசபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்கவேண்டும். ஊரில் உள்ள நம்பிமார்களும் (பூசாரிகள்) இருக்கவேண்டும். அதில் ஒருவர் உள் மண்டபத்தில் இருக்கவேண்டும். கூடி நிற்கும் நம்பிமார்களில் வயோதிகராய் உள்ள ஒருவர் ஒரு குடும்பிலிருந்து ஓலை இடப்பட்டுள்ள ஒரு குடத்தைத் தூக்கி எல்லோரும் நன்கு காணுமாறு மக்களிடம் காட்டுவார். அவ்விதம் காட்டிய பின் அக்குடத்திலிருக்கும் ஓலைகளை வேறொரு குடத்திலிட்டு நன்றாக கலக்குவர்.

பின் ஏதும் அறியாத ஒரு சிறுவனைக் கொண்டு ஒரே ஒரு ஓலையை மட்டும் எடுக்கச்செய்வர். எடுத்த ஓலையை மத்யஸ்தன் தனது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையில் வாங்கவேண்டும்.

வாங்கிய ஓலையை அவர் வாசிக்கவேண்டும். வாசித்த பிறகு உள் மண்டபத்திலிருக்கும் நம்பிமாரும் அதை வாசிப்பர். அவ்விதம் வாசித்த பெயரைப் பின்னர் எழுதிக்கொள்வர்.
இவ்விதமே 30 குடும்பிற்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது கடமைகளை ஆற்றுவர்.

கல்வெட்டு ஆதாரம்.
அமைவிடம் : உத்திரமேரூர், காஞ்சிபுரம்வட்டம், செங்கல்பட்டுமாவட்டம்
அரசன் : முதலாம் பராந்தகன் (பொ. 907 - 856)
ஆட்சியாண்டு : 12 மற்றும் 14
பொ. . : பொ.. 919 , 923
மொழி : தமிழ்
எழுத்து : 10ஆம் நூற்றாண்டு தமிழும் கிரந்தமும்
இது 1000 வருடங்களுக்கு முன் நிலை, தற்போதைய வேட்பாளர்களோ வாக்காளர்களோ பயப்பட வேண்டாம்.
C.P.சரவணன், வழக்கறிஞர் 


No comments:

Post a Comment