Monday, 26 December 2016

அறம்-1 (Ethics)


அறம் - இலக்கியங்களில் விளக்கம்
 ‘அறுஎன்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததேஅறம்என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்கு மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. (திருக்குறள் - நீதி இலக்கியம் - பக் 23)

அறம் பற்றிய கருத்துகள்
நம் முன்னோர் அறம் என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு எதிக்ஸ் (Ethics) என்னும் ஆங்கிலச் மிகவும் பொருந்துவதாக உள்ளது. இது பற்றி பின்னர் காண்போம்.நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலையேஎதிக்ஸ்என்பதாகும். து தமிழில் அறவியல் எனப்படும்.
எதிக்ஸ் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும். முதன் முதலில் இச்சொல் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களையே உணர்த்தி வந்தது. பின்னர் நடத்தை என்னும் பொருளே போற்றப்பட்டது. ஒழுக்கத்தைக் குறிப்பிடும் Moral என்னும் ஆங்கிலச் சொல்லும் பழக்க வழக்கம் என்னும் பொருளையே குறித்தது. இதனால் மனித நடத்தை குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் வழக்கமாகக் கொள்ளும் முடிவையே ஒழுக்கமாகக் (Morality) கொண்டனர் என்பது புலனாகின்றது.
இதனால் தனி மனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டபொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து வாழ்க்கை நெறியாக மாண்புற்றது.

அறத்தின் அடிப்படை
அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா என்று பார்ப்போம். செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். மன மாசு என்பது பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் ஆகியவை. இதையே வள்ளுவர்....
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
 (குறள் - 34)
என்றும்,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
(குறள் - 35)
என்றும் கூறுகிறார். இதனடிப்படையில் பார்க்கும்போது அறம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்றாகும். இத்தகைய அறம் பற்றிப் பேச எழுந்தவையே அறநூல்கள். அறநூல்களுக்கு உயிராக இருப்பது கருத்து. அறக் கருத்துகளையும் இலக்கியச் சுவையுடன் கொடுக்கப்படும்பொழுது அவை அற இலக்கியங்கள் ஆகின்றன.
 சிலப்பதிகாரத்தில் அறம்
சிலப்பதிகாரத்தின் அடிப்படையாக மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.
1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும்
2)
புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர்
3)
ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்
என்பன அவை. இவற்றோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகவும் திகழ்கிறது சிலப்பதிகாரம். இதில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் உண்டு. சமண, பௌத்த, வைதீக நெறிகளும் உண்டு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆய்ச்சியர், குறவர், பரத்தையர் எனப் பல இனத்தவர்களும் இங்குப் பேசப்படுகின்றனர். இவற்றை எல்லாம் தொகுத்துக் காண்பது ஓர் அரிய செயலே. மாணவர் தம் பயன்கருதி ஒரு சில இங்குச் சுட்டப்பெறுகின்றன.
அரசியல்
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும். செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று. அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளைப் பேசுகிறது சிலம்பு.
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது;
அடிகள் நீரே அருளுக
(சிலப்பதிகாரம் - பதிகம் : 61-62)
என்ற சாத்தனார் கூற்றிற்கு இணங்க இளங்கோ தம் காப்பியப் படைப்பை மூவேந்தர்க்கும் உரியதாகவே படைத்துள்ளார், சிலம்புச் செல்வர் .பொ.சிவஞானம் குறிப்பிடுவது போலச் சிலம்பின் தொடக்கமும் அரசியல், முடிவும் அரசியல் என்ற நிலையில் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
 அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான்.
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது

                                                                                              (
சிலப்பதிகாரம்: 25: 98-99)
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
(சிலப்பதிகாரம்-பதிகம்: 55) என்ற காப்பிய அறம் மதுரைக் காண்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் நேர்மை, நீதி தவறாத ஆட்சிமுறை இங்கு விளக்கப்படுகிறது. ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தேஎன்றும், ‘தேரா மன்னாஎன்றும் கண்ணகி பாண்டிய மன்னனைப் பழித்தும் கூட, அவன் அமைதியாகக்கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்றுஎன்று கூறுவது அவனது நேர்மைக்கு - செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டு. நடுவுநிலையோடு வழக்கைக் கேட்டுத் தன் தவறு உணர்ந்து உயிரையே விடுகிறான் பாண்டியன்.
அறியாது பசுவின் கன்றினைக் கொன்ற இளவரசனைப் பலிகொடுத்துப் பசுவின் துயர் களைந்த மனுநீதிச் சோழனைப் பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். தமிழர் திறம் பழித்த வட ஆரிய மன்னரை வெற்றி கொள்கிறான் சேரன் செங்குட்டுவன். வடநாட்டுப் போர் தொடங்கத் திட்டமிட்ட சேரன் தூது அனுப்ப எண்ணுகிறான். ஆனால் வஞ்சி நகரில் முரசு அறைந்து அறிவித்தாலே போதும்; செய்தி வடநாடு எட்டிவிடும் என்கிறான் அமைச்சன். இது நாட்டில் பிறநாட்டு ஒற்றர்கள் நிறைந்திருந்ததைக் காட்டுகிறது. அரண்மனையைச் சுற்றி அகழி இருந்ததையும் கோட்டை மதிலில் பல்வேறு வகையான போர்க் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததையும் மதுரைக் காண்டத்தில் காண்கிறோம். அரசனுடன் புலவர் பெருமக்களும், பட்டத்து அரசியும் உடன் இருந்து அரசியல் முடிவுகளை எடுத்தமை சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க முடிவு செய்ததன் மூலம் அறியலாம்.
பேரரசின் கீழ் ஆட்சி செய்து வரும் சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் பிறநாட்டு மன்னர்களும் திறை செலுத்திய செய்தியைச் சிலம்பு தெரிவிக்கிறது. அதோடு மன்னனைக் காண வரும் மக்களும் குறுநில மன்னர்களும் காணிக்கைப் பொருளுடன் வந்து அரசனைக் கண்டு வாழ்த்துவதும் அரசியல் வழக்கமாக இருந்திருக்கிறது. போரில் புறமுதுகு காட்டி ஓடியவர்களையும், தவக்கோலம் பூண்டு உயிர் பிழைத்துச் சென்றவரையும் தாக்குவது போர் அறம் அன்று என்பதையும் சிலம்பு சித்திரிக்கிறது. இப்படி எத்தனையோ பல அரசியல் செய்திகளைச் சிலம்பின் வழி அறியலாம்.

மணிமேகலை காட்டும் அறம்
மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் எழுதப் பெற்ற நூல். சங்க காலத்தில் ஆளுமை பெறாத சமய உணர்வு படிப்படியாக வளர்ந்திருப்பதை மணிமேகலை காட்டுகிறது. சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் சமணத் துறவியாகக் காட்சி தருகிறார். அவரும்கூடக் கண்ணகியின் ஆற்றலுக்குக் குறைந்தவராகவே காட்டப் பெறுகிறார். மணிமேகலையின் கதைத் தலைவியே பௌத்த சமயத்தைப் பரப்புகின்றாள். தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சமயம் மனித வாழ்வில் பேரிடம் பெற்றதை மணிமேகலை வெளிப்படுத்துகிறது.
மணிமேகலை பத்தினிப் பெண்களை மூவகைப்படுத்திக் கூறுகின்றது.

(
) கணவன் இறந்தவுடன் எரி மூழ்கி இறப்பவர்
(
) தனியே எரி வளர்த்து இறப்பவர்
(
) கணவனை நினைந்து கைம்மை நோன்பேற்பவர்
என மணிமேகலை இவர்களை வகைப்படுத்துகின்றது.
மணிமேகலை மனிதர் உடம்பை இழிவானதாகக் கருதி உரைக்கின்றது. உடம்பு புலால் நிறைந்தது, மூத்துத் தளர்வது, பிணி கூடுவது. குற்றம் புரிவது; கவலையின் கொள்கலம் என்று கூறி இதனைப் புறக்கணிப்பதே சரியானது என்கின்றது.
மணிமேகலை கூறும் பண்பாட்டு நெறிகள்
மணிமேகலை ஆரியர்தம் பண்பாட்டையும், தமிழர் பண்பாட்டையும் ஒப்பிடும் வகையில் உரைக்கின்றது. ஆபுத்திரன் என்பவன் வேள்வியில் பலி கொடுப்பதற்கெனப் பார்ப்பனர் கட்டி வைத்திருந்த பசுவை அவிழ்த்து விடுகிறான். அதைக் கண்ட பார்ப்பனர்கள் அவன் பிறவி இழிந்தது என்று தூற்றுகின்றனர். அவன் அமைதியாக "உங்கள் முனிவர்கள், பசு வயிற்றிலும் மான் வயிற்றிலும் நரி வயிற்றிலும் பிறந்தவர்களாயிற்றே" என்று மறுமொழி கூறுகிறான். ஆபுத்திரன் ஊரை விட்டு விரட்டப்படுகிறான். ஆபுத்திரனுக்குத் தெய்வம் அமுதசுரபியை அளிக்கிறது. அமுதசுரபி கொண்டு ஆபுத்திரன் அறம் செய்கிறான். பிறர் பசி தீர்க்க அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் கோமுகி என்ற பொய்கையிலே அதனை விட்டெறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அப்பாத்திரமே பிறகு மணிமேகலையின் கையை அடைகிறது. மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலை ஆக்குகின்றாள்.
பெண்களின் கற்பு, தவசிகளின் நோன்பு ஆகியவற்றை அரசன் பாதுகாக்காவிட்டால் அவை இடர்ப்படும் என இந்நூல் கூறுகின்றது. எது பெரிய அறம் என்ற வினாவிற்கு மணிமேகலை கூறுவது கேளுங்கள்!
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்
(மணி)
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இவை என அறிந்து அவற்றை எல்லார்க்கும் வழங்குவதே பண்பாடு எனத் தெரிவித்துள்ளது அக்காலச் சமூகம்.

வளையாபதி உணர்த்தும் அறம்
எல்லா நீதி நூல்களும் சொல்வது போல, கொலை, களவு, கள், காமம், பொய் நீங்குக, பிறரை ஏசாதே, புறங்கூறாதே, வன்சொல் சொல்லாதே, பிறரை எளியர் என்று எள்ளி நகையாடாதே, ஏதில் பெண் தழுவாதே, உயிர்கள் மாட்டு அன்பு கொள். மானம் போற்றுக, புலால் உண்ணற்க, உலகில் குற்றமே செய்யாதார் எவரும் இலர். பொருளாசை கொள்ளற்க, அருளொடு அறம் செய்க; சீற்றம் நீங்குக; தவம் செய்க; தேர்ந்து தெளிக; இளமையும் இன்பமும் செல்வமும் நில்லாது நீங்கும்; நாளும் துன்பமே; நல்லதை யாரும் மதிக்க மாட்டார்; கல்வியும் கைப்பொருளும் இல்லாதார் சொல் புல்லாய் மதிக்கப் பெறும் என்று முழுக்க முழுக்க, அறம் சொல்வதாகவே நமக்குக் கிடைத்துள்ள வளையாபதிப் பாடல்கள் அமைகின்றன.

திரிகடுகம் காட்டும்அறத்தின் உயர்வும் சிறப்பும்
இளமையில் கல்வி கற்பதும், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும், சான்றோர் நெறியில் செல்வதும் உயர்ந்த அறங்களாகும். நல்லவருள் நல்லவர் எனப்படுதல், நட்பு கொள்வதில் சிறந்தவர் எனப்படுதல் ஆகியன நல்லவர் மேற்கொள்ளும் அறங்களாகும்.
உலகிலேயே சிறந்த அறம் வறியவர்க்கு வேண்டுவன கொடுத்தல் ஆகும். வறுமை நிலையிலும் கீழான செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறம் ஆகும். (திரி-41)

இயற்கையும் அறமும்
அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும். குடிமக்களை வருத்தி வரி வாங்கும் அரசனுடைய நாட்டில் மழை பெய்யாது. பொய் பேசுபவர் நாட்டில் மழை பெய்யாது. வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது திரிகடுகம். (திரி-50)

அறத்திற்கு வழி வகுப்பன
அறம் செய்தால் இன்பத்தையும் அறம் அல்லாத செயல் செய்தால் துன்பத்தையும் தரும் என்பதை எடுத்துச் சொல்லி மனிதரை நல்வழிப்படுத்துகிறது திரிகடுகம்.

கடன்படாது வாழ்பவன், வந்த விருந்தினரைப் போற்றுபவன், ஒருவர் சொல்லியதை மறவாது மனத்தில் வைப்பவன் இம்மூவரையும் நண்பர்களாகப் பெறுவது நன்மை தருவதாகும். அது அறம் செய்ய வழிவகுப்பதாகும். (திரி-12)

No comments:

Post a Comment