Monday, 2 January 2017

குடியம் குகை (Gudiyam Cave) ஆதிமனிதன் / கற்கால மூத்தகுடி வாழ்ந்த இடம்




குடியம் குகை  தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ளது. இது ஒரு தொன்மையான வரலாற்றுக் குகைவாழிடம் ஆகும். சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்குகையானது தொல்லியல் ஆய்வாளரான இராபர்ட் புருசு ஃபூட்டால் (Robert Bruce Foote) கண்டுபிடிக்கப்பட்டது.


மே 30, 1863 – அன்று இந்திய தொல் பழங்கால வரலாற்றின் பொன் நாள். பனியுக காலத்திலும், இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்த நாள் ஆகும். ராபர்ட் புரூஸ் பூட் எனும் வரலாற்று ஆராய்ச்சியாளர், சென்னை, பல்லாவரம் பகுதியில், பழைய கற்கால கருவியை முதன்முதலில் கண்டெடுத்த நாள்.


ராபர்ட் புரூஸ் பூட்



சோபியா வெல்ஸ் ஃபூட்(Sophia Wells Foote) வில்லியம் ஹென்றி ஃபூட் (William Henry Foote) தம்பதிகளுக்கு மகனாக 22,செப்டெம்பர், 1843 தேதி பிறந்தார். 1857-ஆம் வருடம் தாமஸ் ஓல்ஹமால்(Thomas Oldham) இந்திய நிலவியல் துறையில் பணியமத்தி மெட்ராஸ் மாகணத்துக்கு அனுப்பினார்.



கடந்த 1858, செப்டம்பர் மாதம், தன், 24வது வயதில், மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில், நில அளவையாளராக தன் பணியைத் துவக்கினார். 33 ஆண்டுகள் பணிபுரிந்து, 1891ல், முதுநிலை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். இவரது ஆய்வு முழுக்க, முழுக்க சென்னை மாகாணத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இவரது முதல் ஆய்வு, சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இங்கு, கற்கால மனிதர்கள், கற்களையே ஆயுதங்களாக பயன்படுத்தினர் என்பதை கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தினார். அதன்பின், திருவள்ளூர் மாவட்டம் (அப்போ
தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது) பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகே அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

ராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை உறுதிப்படுத்தியுள்ளார். பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது.

சென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், 1904ல், சென்னை அருங்காட்சியத் துறையால் வாங்கப்பெற்று, அதற்கென தனி காட்சியறை, தொல்லியல் பிரிவில் நிறுவப்பட்டது. அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, "இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை' என்றழைக்கப் பட்ட ராபர்ட் புரூஸ் பூட், டிச.,29, 1912ல், இயற்கை எய்தினார். 
ஏற்காடு புனித ட்ரினிடி சர்ச்சில் (Holy Trinity Church, Yercaud) இவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை ((The Father of Indian Prehistory) என்று, வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்படுகிறார்.

தொல்லியல் ஆய்வுச் சான்றுகளின்படி இக்குகைகள் பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையெனக் கருதப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் அகழ்வாய்வுத் துறையினரால் இவ்விடம் 1962-64 ல் அகழ்வாய்வு செய்யப்பட்டது.

தொல் பழங்காலத்தைப் பற்றி மட்டும் தனியாக விளக்கும் வகையில் அமைந்துள்ள தொல்லியல் அகழ்வைப்பகம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். இந்தியாவிலேயே பூண்டிக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கத்தில் தான் அதிக அளவில் பழைய கற்கால கருவிகள் கிடைத்திருப்பதால் இந்த அகழ்வைப்பகத்தை இப்பகுதியில் அமைத்துள்ளனர்.
இங்கு பழைய கற்கால (Paleolithic Age) கருவிகள் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல நுண்கற்காலம் (Microlithic Age), புதிய கற்காலம் (Neolithic Age), பெருங்கற்காலம் (Megalithic Age) ஆகியவற்றைச் சேர்ந்த பிற தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அகழ்வைப்பகத்தில் ஆதிமனிதர்களின் / கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பலவகை கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், வட்டுகள், துளைப்பான்கள், சிறு கத்திகள், அம்பு முனைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அகழ்வைப்பக கட்டடத்திற்கு வெளியே 'தொல்மாந்தர் வாழ்வகம்' என்ற பெயரில் பழைய கற்கால மனிதர்களின் ஆளுயர மாதிரி சிலைகள் நான்கும், பாறை குகை மாதிரி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

மே 30-ம் தேதி இந்தியாவில் பனியுகக் காலத்திய மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்ட நாள். 

CP சரவணன், வழக்கறிஞர் 

No comments:

Post a Comment